பள்ளிபாளையம் அருகே கார் மோதி மூதாட்டி காயம்: வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
பள்ளிபாளையம் அருகே கார் மோதி மூதாட்டி காயம் அடைந்தார். அந்த பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம்,
இதுபற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த கொக்கராயன்பேட்டையில் இருந்து நேற்று மாலை ஒரு கார் வேகமாக சென்றது. அம்பேத்கர் நகர் சர்ச் ரோட்டில் சென்றபோது ரோட்டை கடக்க முயன்ற கமலா (வயது 70) என்ற மூதாட்டி மீது கார் மோதியது. இதில் கமலா காயம் அடைந்தார். பின்னர் கமலாவை திருச்செங்கோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதை அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.
பின்னர் கொக்கராயன்பேட்டை பஸ் நிலைய ரோட்டில் மாலை 5.30 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மொளசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கமலா மீது மோதிய கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story