தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு


தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள தங்கம்மாள்புரத்தை சேர்ந்த முருகன் மனைவி முத்துமாரி (வயது 34). இவர் தனது 6 வயது மகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அலுவலக வெளிப்புற வளாகத்தில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்.

திடீரென அவர் தான் கொண்டு வந்த விஷத்தை எடுத்து குடித்தார். அப்போது அங்கு இருந்த கலெக்டர் அலுவலக பெண் பணியாளர் ஒருவர், அந்த விஷத்தை அவரிடம் இருந்து பறிக்க முயன்றார். அதற்குள் அவர் விஷத்தை குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உடனே அங்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் விரைந்து வந்து முத்துமாரியை ஒரு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துமாரி தனது கணவருடன் சென்னையில் வசித்து வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய கணவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. கணவர் இறந்ததை தொடர்ந்து அவர் மந்திச்சுனையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கணவரின் குடும்பத்தினர் சிலர் செல்போனில் முத்துமாரியை தொடர்பு கொண்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய தந்தை தர்மராஜ் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே முத்துமாரி தனது பெற்றோருடன் வந்து தாக்கியதாக கூறி, அவருடைய உறவினரான மற்றொரு பெண் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வருமாறு முத்துமாரியிடம் போலீசார் கூறினர்.

இந்நிலையில், அவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து விஷம் குடித்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று மாலையில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பொதுமக்கள் உடைமைகளை போலீசார் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது முதியவர் ஒருவர் கொண்டு வந்த பையில் விஷ பாட்டில் இருந்தது. போலீசார் விசாரணையில் அந்த முதியவர் விஷம் குடித்து இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையில், அவர் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்த அருளானந்தம் (72) என்பதும், அவருடைய நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்து உள்ளதால் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த இடத்தில் விஷம் குடித்ததாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் உள்பட 2 பேர் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story