கொடைக்கானலில் காட்டுத் தீயால் வனப்பகுதி பற்றி எரிகிறது - புகை மூட்டத்தால் சுற்றுலா பயணிகள் அவதி


கொடைக்கானலில் காட்டுத் தீயால் வனப்பகுதி பற்றி எரிகிறது - புகை மூட்டத்தால் சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 23 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஏற்பட்ட காட்டுத் தீயால் வனப்பகுதி பற்றி எரிகிறது. புகை மூட்டத்தால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் அதிகளவில் வெப்பம் நிலவி வருவதால் மரங்கள், புற்கள் கருகி வருகின்றன. இதனால் வனப்பகுதிகளிலும், தனியார் தோட்டங்களிலும் அவ்வப்போது தீப்பற்றி வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த குறிஞ்சிநகர், பாத்திமா குருசடி, பேத்துப்பாறை மற்றும் நகரை ஒட்டியுள்ள சிட்டி வியூ உட்பட பல இடங்களில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது.

இதன்காரணமாக தனியார் தோட்டப்பகுதிகளில் உள்ள பேரிக்காய், ஆரஞ்சு, பிளம்ஸ் மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. இதுதவிர வனப்பகுதியில் உள்ள ஏராளமான விலையுயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இதற்கிடையே டைகர் சோலை மற்றும் பெருமாள்மலை வனப்பகுதிக்கு தீ பரவி வருவதால் அங்குள்ள சோலை மரங்கள் தீக்கிரையாகும் அபாயம் உள்ளது.

தீயை அணைக்க வனத் துறையினர் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் தீ பரவி வருவதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதற்கிடையே தீ விபத்து காரணமாக மலைப்பாதைகளிலும், நகரின் சில பகுதிகளிலும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே கூடுதலாக தீத்தடுப்பு குழுவினரை நியமித்து தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story