சென்னையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேச்சு


சென்னையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் குறைந்து உள்ளன போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 5:00 AM IST (Updated: 23 Feb 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் கண்காணிப்பு கேமராவால் குற்றங்கள் பெருமளவு குறைந்து உள்ளன என போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வேளச்சேரி போலீஸ் நிலையத்தின் சார்பில் சிறார் மன்றம், காவல் உதவி மையம், இறகு பந்து கூடம் ஆகியவற்றின் திறப்பு விழா மற்றும் 1,500 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு சிறார் மன்றம், காவல் உதவி மையம், இறகு பந்து கூடம் ஆகியவற்றை திறந்து வைத்ததுடன், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டையும் தொடங்கிவைத்தார்.

விழாவில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

குற்றங்கள் குறைவு

சென்னையில் 2 லட்சத்து 30 ஆயிரம் கேமராக்களுக்கு மேல் பொருத்தப்பட்டு உள்ளது. பொது மக்களின் ஆதரவால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. கண்காணிப்பு கேமராவால் பெருமளவில் குற்றங்கள் குறைந்து உள்ளன.

குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவுகிறது. கண்காணிப்பு கேமராவால் போலீசாரின் பணி எளிதாக இருக்கிறது. உண்மையான குற்றவாளி பிடிபடுகிறார். குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு கேமரா என செயல்படுத்த எண்ணினோம். ஆனால் அதைவிட சிறப்பாக பொருத்தப்பட்டு உள்ளது.

பயப்படுகிறார்கள்

கண்காணிப்பு கேமரா இருப்பதால் குற்றம் செய்ய குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்து, திருடிய பொருட்களை மீட்கப்படுவதற்கு உதவியாக உள்ளது.

நீதிமன்றத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட காட்சிகள் ஆதரமாகவும் இருக்கிறது. சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் கண்காணிப்பு கேமராவால் பெருமளவு குறைந்து இருக்கிறது. ரவுடிசமும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் போலீஸ் கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை தெற்கு இணை கமிஷனர் மகேஷ்வரி, பரங்கிமலை துணை கமிஷனர் முத்துச்சாமி, அடையார் துணை கமிஷனர் ஷேசாங்சாய், கிண்டி உதவி கமிஷனர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story