குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் உடலில் வெந்நீரை ஊற்றி லாரி டிரைவர் கொலை தலைமறைவான மனைவிக்கு வலைவீச்சு
குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் லாரி டிரைவர் மீது வெந்நீரை ஊற்றி கொலை செய்த அவருடைய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை நெற்குன்றம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 50). லாரி டிரைவர். இவருடைய மனைவி விமலா(42). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். ரமேசுக்கு குடிப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 18-ந்தேதி இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ரமேஷ், சமையல் அறையில் இருந்த தனது மனைவி விமலாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
வெந்நீரை ஊற்றி கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த விமலா, அடுப்பில் கொதித்துக்கொண்டு இருந்த வெந்நீரை எடுத்து தனது கணவர் ரமேசின் முதுகில் ஊற்றினார். இதில் உடல் வெந்துபோனதால் வலியால் அலறி துடித்த ரமேசை அவரது உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், பலியான ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி கொலை வழக்காக பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தலைமறைவான விமலாவை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story