சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்


சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் வந்த தமிழக வீரருக்கு விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு தாமதமாக போட்டிக்கு புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 22 Feb 2019 11:00 PM GMT (Updated: 22 Feb 2019 9:28 PM GMT)

சென்னை விமான நிலையத்தில், துப்பாக்கியுடன் வந்த தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரை விமானத்தில் செல்ல அனுமதிக்க மறுத்ததால், ஒருநாள் தாமதமாக அவர் போட்டியில் கலந்துகொள்ள புறப்பட்டு சென்றார்.

ஆலந்தூர்,

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி 3 நாட்கள் நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 10 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். அதில் புதுக்கோட்டையை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமானும் ஒருவர். இவர், இந்தியாவின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்.

தோகாவில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிருத்விராஜ், கடந்த 20-ந் தேதி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தோகா செல்ல துப்பாக்கியுடன் வந்தார்.

அனுமதி மறுப்பு

ஆனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், பிருத்விராஜை துப்பாக்கியுடன் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள தோகா செல்லும் வீரர்கள் துப்பாக்கி எடுத்துச்செல்ல இந்திய விமான ஆணையக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தேசிய துப்பாக்கி சுடும் அமைப்பு சிறப்பு அனுமதி பெற்று இருந்ததாகவும், அதற்கான ஆவணங்களை காட்டிய பின்பும் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் மற்ற வீரர்கள் டெல்லியில் இருந்து தோகாவுக்கு இதே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சிறப்பு அனுமதியின் பேரில் துப்பாக்கியை எடுத்துச்சென்று உள்ளனர் என்றும் தெரிகிறது.

தாமதமாக புறப்பட்டு சென்றார்

இது தொடர்பாக 21-ந் தேதி அதிகாலை 3 மணி வரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடமும், இண்டிகோ அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்துவிட்டு பிருத்விராஜ் தொண்டைமான் தோகா செல்லாமல் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பிச்சென்றார்.

இதனால் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து விமான நிலைய ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இண்டிகோ உயர்அதிகாரிகளிடம் இந்திய துப்பாக்கி சுடும் அமைப்பு புகார் செய்தது.

இதையடுத்து பிருத்விராஜ் தொண்டைமானுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஒரு நாள் தாமதமாக நேற்று அதிகாலை தோகா சென்ற விமானத்தில் அவர் துப்பாக்கியுடன் போட்டியில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.

முன்னதாக பிருத்விராஜ் தொண்டைமான் கூறும்போது, “திட்டமிட்டபடி நான் 21-ந்தேதி அதிகாலை சென்று இருந்தால் பயிற்சி போட்டியிலும் பங்குபெற்று இருப்பேன். ஆனால் சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பயிற்சி போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக போட்டியில்தான் கலந்து கொள்ளமுடியும். ஆனாலும் இந்த சம்பவத்தை மறந்து, போட்டியில் முழு கவனம் செலுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்” என்றார்.

பிருத்விராஜ் தொண்டைமான், திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமானின் மகன் ஆவார்.

Next Story