சாப்பாடு ஊட்டும்போது பரிதாபம் மழலையர் பள்ளியில் 2½ வயது குழந்தை மூச்சுத்திணறி பலி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்


சாப்பாடு ஊட்டும்போது பரிதாபம் மழலையர் பள்ளியில் 2½ வயது குழந்தை மூச்சுத்திணறி பலி சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:45 AM IST (Updated: 23 Feb 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

மழலையர் பள்ளியில் சாப்பாடு ஊட்டும்போது 2½ வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.

பெரம்பூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பிரசாத் (வயது 37). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி ஷர்மிளா (28). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு 2½ வயதில் ஜோசப் என்ற மகன் இருந்தான். கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்க்க யாரும் இல்லாததால், வண்ணாரப்பேட்டை எம்.சி.எம். கார்டன் 1-வது தெருவில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்தனர். அந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளதாக தெரிகிறது.

மூச்சுத்திணறல்

நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வழக்கம்போல் குழந்தையை மழலையர் பள்ளியில் விட்டுவிட்டு, குழந்தைக்கு சாப்பாடும் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் மதியம் சாப்பாடு கொடுக்கும்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அந்த மழலையர் பள்ளி நிர்வாகி லதா (45) போனில் பிரசாத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உயிரிழந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாத் மற்றும் அவருடைய மனைவி சுகந்தி ஷர்மிளா இருவரும் பதறி அடித்துக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு தங்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியதை கேட்டு கதறி அழுதனர்.

குழந்தைக்கு மதிய சாப்பாடு ஊட்டும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறியதாகவும் பள்ளி நிர்வாகி தெரிவித்தார்.

சாவில் மர்மம்

குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுத கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி மழலையர் பள்ளி நிர்வாகி லதாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் குழந்தையின் சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும். அதன்பிறகுதான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story