எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறநகர் டிக்கெட் கவுண்ட்டர் இடம் மாற்றம் படியேற முடியாமல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி


எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறநகர் டிக்கெட் கவுண்ட்டர் இடம் மாற்றம் படியேற முடியாமல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி
x
தினத்தந்தி 23 Feb 2019 5:00 AM IST (Updated: 23 Feb 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

எழும்பூர் ரெயில் நிலையத்தில் புறநகர் டிக்கெட் கவுண்ட்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், படியேற முடியாமல் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலங்களை விரிவுபடுத்தி இணைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் இறுதி வேலையாக 10 மற்றும் 11-வது நடைமேடையில், புறநகர் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அருகே புதிய நடைபாதை படிக்கட்டுகள் அமைக்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த பணிக்காக 3 நாட்கள் பழைய நடைபாதை படிக்கட்டுகள் மூடப்பட்டன. பின்னர் புதிய நடைபாதை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் இந்த படிக்கட்டுகள் வழக்கமாக செயல்பட்டு வந்த நடைபாதை படிக்கட்டுகளை விட மிக குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூட்டமாக காணப்படும் நடைபாதை படிக்கட்டுகள் தற்போது அனைத்து நேரங்களிலும் கூட்டமாக காணப்படுகிறது.

பயணிகள் அவதி

இந்த நடைபாதை படிக்கட்டுகள் இணைக்கும் பணிக்காக வழக்கமாக செயல்பட்டு வந்த புறநகர் டிக்கெட் கவுண்ட்டர்களை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்தது. இதனால் வழக்கமாக முதலாவது தளத்தில் செயல்பட்டு வந்த டிக்கெட் கவுண்ட்டர்கள் கீழ் தளத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த மாற்றம் குறித்து பயணிகளுக்கு எந்த ஒரு முறையான அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பலர் வழக்கமான புறநகர் ரெயிலுக்கான டிக்கெட் கவுண்ட்டருக்கு முதல்தளத்தில் இருந்து கீழே இறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர் மாற்றம் தெரியாமல் 4-வது நடைமேடையில் இருந்து முதல்தளத்துக்கு வந்து கீழே இறங்கி மீண்டும் மேலே நடைமேடைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கீழ்த்தளத்தில் குறைவாக செயல்படும் டிக்கெட் கவுண்ட்டர்களால், அவசரமாக வரும் பயணிகள் டிக்கெட் எடுக்கமுடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் சில பயணிகள் அவசரத்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள குறுகலான படிக்கட்டுகளில் வேகமாக கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி பயணி தியாகராஜன் கூறியதாவது:-

உடல், மன வேதனை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் ரெயில் கள் வரும் போது அதிக பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் ஏதேனும் விபரீதம் நடந்து விடுமோ? என்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் இறங்க பயமாக உள்ளது. மேலும் பழைய நடைமேடை படிக்கட்டுகள் சாய்வாகவும் அகலமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் குறுகலாகவும், சாய்வில்லாமலும் அமைந்துள்ளது.

மேலும் 4-வது நடைமேடைகளில் இருந்து ஏறி வந்தால், நேராக டிக்கெட் கவுண்ட்டர் சென்று டிக்கெட் பெற்றுக்கொண்டு நடைமேடைக்கு இறங்கிவிட முடியும். தற்போது படிக்கட்டுகளில் மேலே ஏறி மீண்டும் இறங்கி பின்னர் மீண்டும் ஏறுவதால் அலைச்சல் ஏற்படுவது மட்டும் இல்லாமல் மிகுந்த உடல் மற்றும் மன வேதனைக்கு உள்ளாகிறோம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு தனியாக புறநகர் டிக்கெட் கவுண்ட்டர்களும் இல்லாததால் கூட்டத்தில் நின்று டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story