ஸ்ரீமுஷ்ணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆணையன் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள விளைநிலங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆணையன் தெரு பகுதி மக்கள் ஆழ்துளை கிணறு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் ராமாபுரம்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயமூர்த்தி அங்கு வந்து ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story