தீப்பிடித்து எரிந்த தென்னந்தோப்புகள் சேதுபாவாசத்திரம் அருகே பரபரப்பு
சேதுபாவாசத்திரம் அருகே தென்னந்தோப்புகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து தேங்காய்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயலின்போது பெரும்பாலான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக தற்போது தேங்காய் விளைச்சல் குறைந்து விட்டது. தென்னை விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர். புயலில் விழுந்த ஒரு தென்னை மரத்துக்கு ரூ.1,100 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.
புயல் தாக்கி 99 நாட்கள் கடந்து விட்ட பின்னரும் தென்னை விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை முழுமையாக சென்றடையவில்லை. பல இடங்களில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழனிக்கோட்டையை சேர்ந்த பழனிவேலு என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நேற்று திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ மளமளவென பரவி அருகே உள்ள அன்பழகி, அய்யாச்சாமி, ராஜேந்திரன், வீரையன் ஆகியோருடைய தென்னந்தோப்புகளுக்கும் பரவியது. இதுகுறித்து பேராவூரணி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் தென்னந்தோப்புகளில் விழுந்து கிடந்த மரங்கள், தென்னை மட்டைகள், தென்னங்கீற்றுகள் எரிந்து நாசமாயின. தென்னந்தோப்புகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story