அந்தியூரில் ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி லாரியின் பின்சக்கரங்கள் கழன்று ஓடின
அந்தியூரில் ரோட்டின் தடுப்பு சுவரில் மோதியதால் லாரியின் பின்சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் நால் ரோட்டில் இருந்து சின்னத்தம்பி பாளையத்தில் உள்ள செங்கல் சூளைக்கு நேற்று ஒரு லாரி மண் ஏற்றிச்சென்று கொண்டு இருந்தது. அந்தியூர் பஸ்நிலையம் அருகே லாரி சென்றபோது, ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் திடீரென மோதியது.
இதில் லாரியின் பின்பக்கத்தில் உள்ள இரும்பு அச்சு முறிந்து 4 சக்கரங்களும் தனியாக கழன்று ஓடின. லாரியின் பின்பகுதி அப்படியே ரோட்டில் படுத்துக்கொண்டது.
நல்லவேளையாக டிரைவருக்கோ, அல்லது ரோட்டில் சென்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், அந்தியூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். வேறு ஒரு லாரி அங்கு கொண்டுவரப்பட்டு, மண்பாரம் அதில் ஏற்றப்பட்டு செங்கல்சூளைக்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் கிரேன் மூலம், விபத்துக்குள்ளான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.