விவசாயம் பாதிக்கப்படுவதால் இறால் பண்ணைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் பொன்னேரி விவசாயிகள் கோரிக்கை


விவசாயம் பாதிக்கப்படுவதால் இறால் பண்ணைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் பொன்னேரி விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2019 3:22 AM IST (Updated: 23 Feb 2019 3:22 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அடுத்த பொதியாங்குளம் கிராமத்தில் இறால் பண்ணை கழிவுநீரால் நெற்பயிர்கள் கருகி விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே இறால் பண்ணைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி,

மீஞ்சூர் ஒன்றியம் பொன்னேரி அடுத்த பூங்குளம் ஊராட்சியை சேர்ந்தது பொதியாங்குளம் கிராமம். இங்கு 250 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள், தங்களது நிலத்தில் நெற்பயிர் நடவு செய்தனர்.

இந்த கிராமத்தில் விவசாய நிலத்திற்கு அருகில் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் விடப்படுகிறது.

விவசாயம் பாதிப்பு

உப்பு மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த இந்த கழிவுநீர், ஏரி, குளங்களில் உள்ள நீரில் கலக்கிறது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தவறியதால் நெற்பயிர் இடப்பட்ட விவசாயிகள் ஏரி, குளங்களில் இருந்த நீரை வயலுக்கு பாய்ச்சினர். நெற்கதிர்கள் உருவானநிலையில் அவை சரியான வளர்ச்சி இன்றி காணப்பட்டது. பின்னர் நெற்பயிர்கள் கருகி முதிர்ச்சியடையாமல் பதர் ஆகியது.

நெற்பயிர்களை அறுவடை செய்தபோது ஒரு ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் நெல் மட்டுமே கிடைத்தது. இறால் பண்ணை கழிவுநீர் குளத்தில் கலந்ததே இதற்கு காரணம். விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் விரக்தி அடைந்தனர்.

கிடைத்த குறைந்த அளவு நெல்லும் தரமானதாக இல்லை. இதன் காரணமாக நல்ல விலைக்கு அதனை விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில விவசாயிகள் நெற்பயிரை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டுவிட்டனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தடை விதிக்க கோரிக்கை

ஏரி மற்றும் குளங்களில் இறால் பண்ணை கழிவு நீர் கலந்து நீரின் தன்மை மாறி வேதி வினையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாய நிலங்கள் உவர்ப்பு நிலமாக மாறிவிட்டது.

எனவே விவசாய நிலங்களுக்கு அருகில் இறால் பண்ணைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் வாழ்வாதாரமான சுத்தமான நீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் விவசாயத்தை பெருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறையும், மாவட்ட நிர்வாகமும், வருவாய் துறையும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story