விலங்குகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வண்டலூர் பூங்காவில் கோடை கால முகாம்


விலங்குகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வண்டலூர் பூங்காவில் கோடை கால முகாம்
x
தினத்தந்தி 23 Feb 2019 4:07 AM IST (Updated: 23 Feb 2019 4:07 AM IST)
t-max-icont-min-icon

விலங்குகள் குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வண்டலூர் பூங்காவில் கோடை கால முகாம் நடந்தது.

வண்டலூர்,

வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டலூர் பூங்காவில் 171 இனங்களில் 2,484 எண்ணிக்கையிலான பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோடை விடுமுறையில் பூங்காவிலுள்ள மேற்கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உயிரினங்கள் பற்றியும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் பூங்காவில் நேற்று கோடை கால முகாம் நடந்தது

ஒவ்வொரு குழுவுக்கும் 25 மாணவ-மாணவிகள் வீதம் 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் வனஉயிரினங்களை பற்றியும், அதன் உயிரியல் இயல்பை பற்றியும் நிபுணத்துவம் பெற்றவர்கள், மாணவ-மாணவிகளுக்கு விளக்கும் வகையிலும், உரையாடும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கு பெறும் மாணவ-மாணவிகள் உயிரியல் பூங்காவின் தூதுவர்களாக நியமிக்கப்படுவதுடன் அவர்கள் ஆண்டுக்கு 10 முறை பூங்காவிற்கு இலவச நுழைவு அனுமதி பெறும் வகையிலும் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

51 மாணவ-மாணவிகள்

நேற்று காலை 9 மணியளவில் பூங்காவில் பள்ளியில் முதல் குழுவின் கோடை கால முகாம் பூங்கா உதவி இயக்குனர் தலைமையில் தொடங்கப்பட்டது. மேலும் பூங்கா விலங்கு மருத்துவர்கள் மற்றும் உயிரியலாளர்கள் கலந்துகொண்டு விலங்குகள் பற்றி உரையாடல் நடத்தி களப் பயிற்சியும் அளித்தனர். இதில் 51 மாணவ-மாணவிகள் 2 குழுக்களாக ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒட்டேரி, ரத்தினமங்கலம், காரணைபுதுச்சேரி, கொளப்பாக்கம் மற்றும் கண்டிகை அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது பள்ளி ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகளுடன் பூங்கா விலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்கள் கலந்துரையாடி அவர்களை ஊக்குவித்தனர். முகாமில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு பூங்காவின் சார்பாக பயிற்சி கையேடு, உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது என்பதை பூங்கா நிர்வாகம் சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story