அவினாசியில் 28–ந் தேதி நடக்கிறது அத்திக்கடவு– அவினாசி திட்ட அடிக்கல் நாட்டுவிழா முதல்–அமைச்சர் பங்கேற்கிறார்


அவினாசியில் 28–ந் தேதி நடக்கிறது அத்திக்கடவு– அவினாசி திட்ட அடிக்கல் நாட்டுவிழா முதல்–அமைச்சர் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 22 Feb 2019 11:30 PM GMT (Updated: 22 Feb 2019 10:43 PM GMT)

அவினாசியில் அத்திக்கடவு–அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழா 28–ந் தேதி நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பகுதி குறைந்த மழைபொழிவை பெறும் பகுதியாகும். இங்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆனால் வறட்சியின் காரணமாக விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே விவசாயத்தை மேம்படுத்தவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டமான அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர்.

குறிப்பாக இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, புளியம்பட்டி, நம்பியூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, சேவூர், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 50 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.

எனவே இந்த திட்டத்தை நிறைவேற்றக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதற்காக அத்திக்கடவு–அவினாசி திட்ட போராட்டக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு தொடர்போராட்டங்களை நடத்தினார்கள். போராட்டக்குழுவினர் அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இந்த திட்டத்தின் ஆய்வு பணிக்காக ரூ.3.27 கோடி ஒதுக்கீடு செய்தார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு தொகை ரூ.1532 கோடியாகும். இதையடுத்து திட்டத்திற்கு தமிழக நிதி நிலை அறிக்கையில் ரூ.1000 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற அவினாசியில் அலுவலகம் திறக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வருகிற 28–ந் தேதி காலை 9 மணிக்கு அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா அவினாசியில் நடைபெறுகிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி பணியை தொடர்ந்து வைக்கிறார்.

விழா நடைபெறும் இடம் தேர்வு செய்யும் பணி அவினாசியில் நடந்து வருகிறது. இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், அவினாசி தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர் வேலுசாமி, நகர செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன் மற்றும் ஜெயபால், ராஜேந்திரன், மூர்த்தி, தனாபால், சண்முகம் கலந்து கொண்டனர்.

அவினாசி ஆட்டையாம்பாளையம், தேவராயன்பாளையம், அவினாசி அரசு கலைக்கல்லூரி வளாகம், பழங்கரையை அடுத்த தேவம்பாளையம் பகுதியில் ஏதாவது இடத்தை தேர்வு செய்ய உள்ளனர்.

இது குறித்து அத்திக்கடவு–அவினாசி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது ‘‘ இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த திட்டத்தினால் 843 ஊராட்சிகளில் உள்ள நூற்றுக்கணக்கான குளங்கள் மற்றும் ஏராளமான குட்டைகள் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். இதனால் 50 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் என்றனர்.


Next Story