தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ‘ஸ்மார்ட் கார்டாக’ வழங்கப்பட்டது


தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு  ‘ஸ்மார்ட் கார்டாக’ வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 23 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு ‘ஸ்மார்ட் கார்டாக’ வழங்கப்பட்டது.

தாராபுரம்,

வட்டாரபோக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும்போதும், வாகனங்கள் பதிவு செய்யும் போது, அதற்குரிய ஆவணங்களை காகிதங்களில் அச்சிட்டு வழங்கி வந்தார்கள். அதற்கு பிறகு ஓட்டுனர் உரிமம் மட்டும் பிளாஸ்டிக் கார்டுகளாகவும், வாகன பதிவுகள் காகித ஆவணங்களாகவும் வழங்கப்பட்டு வந்தது.

தரைவழி போக்குவரத்தில் இதுபோன்ற ஆவணங்களை, சில சமூக விரோதிகள் மாற்றி அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டதோடு, பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தது. இதை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் ஆவணங்களுக்குப் பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

அதையடுத்து நேற்று தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பதிவு செய்த வாகன ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமங்கள், ஆகியவை பொது மக்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டாக’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கவேல், நேர்முக உதவியாளர் சாகீர்கான், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘ஸ்மார்ட் கார்டு’ குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:–

இதுவரை பாதுகாப்பு கருதி வாகனம் ஓட்டும்போது வாகனப் பதிவின் உண்மை ஆவணத்தை ஓட்டுனர் வைத்திருக்க மாட்டார்கள். பெரும்பாலும் அதன் நகல்களை மட்டுமே வைத்திருப்பார்கள். அதேபோல் ஓட்டுனர் உரிமத்தின் நகலை மட்டுமே வாகன ஓட்டிகள் வைத்திருப்பார்கள். ஆய்வின்போது ஆவணங்களின் உண்மை தன்மையை கண்டறிவதில் அதிகாரிகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். மேலும் அதற்காக அதிக நேரங்களை செலவழிக்க நேரிடும். ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள் உண்மை ஆவணங்களை மாற்றி மோசடியில் ஈடுபடவும் வாய்ப்பிருந்தது. ஆனால் இனிமேல் இவ்வாறு நடப்பதற்கு வழியில்லை.

இந்த ‘ஸ்மார்ட் கார்டில்’ ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதில் அனைத்து விவரங்களும் அடக்கி வைக்கப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் கார்டை’ ஆய்வு செய்வதற்கென்று தனியாக ஒரு எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை பயன்படுத்தி ‘ஸ்மார்ட் கார்டில்’ உள்ள உண்மை தன்மையை எளிதாக கண்டறிய முடியும். ‘ஸ்மார்ட் கார்டு’ வந்த பிறகு போலி ஆவணங்களோ, மோசடியோ நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. இனிமேல் வழங்கப்படும் ‘ஸ்மார்ட் கார்டை’ வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். என்று கூறினார்.


Next Story