பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சாரண- சாரணிய மாணவ, மாணவிகள் பேரணி


பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சாரண- சாரணிய மாணவ, மாணவிகள் பேரணி
x
தினத்தந்தி 23 Feb 2019 4:17 AM IST (Updated: 23 Feb 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி சாரண- சாரணிய மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது.

நாகர்கோவில், 

சாரண- சாரணிய இயக்க நிறுவனரான பேடன் பவுலர் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ஆண்டுதோறும் சிந்தனை நாள் விழாவாக பள்ளி கல்வித்துறை சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான பேடன் பவுலர் சிந்தனை நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் சாரண- சாரணிய மாணவர்களால் கொண்டாடப்பட்டது.

இதேபோல் நாகர்கோவில் கல்வி மாவட்டம் சார்பில் இந்த விழா நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் வரவேற்று பேசினார். நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மோகனன், சாரண- சாரணிய இயக்க கல்வி மாவட்ட தலைவர் குமாரசுவாமி, ஆசிரியர் ராமசுவாமி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும், சாரண- சாரணிய இயக்க மாவட்ட முதன்மை ஆணையருமான செந்திவேல் முருகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாரண- சாரணிய மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடந்தது.

எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புற வாசலில் இருந்து தொடங்கிய பேரணி, முதன்மைக்கல்வி அதிகாரி அலுவலக சாலை, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, வேப்பமூடு, கோர்ட்டு ரோடு வழியாக மீண்டும் எஸ்.எல்.பி. பள்ளியை சென்றடைந்தது. இதில் ஏராளமான ஆசிரிய- ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? அவற்றை ஒழிப்பதின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்றனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் ஆல்பிரட் ரெத்தினராஜ் நன்றி கூறினார்.

Next Story