வில்லியனூரில் ரூ.8 கோடி செலவில் ஆயுர்வேத மருத்துவமனை கட்டும்பணி நாராயணசாமி, நமச்சிவாயம் தொடங்கி வைத்தனர்
மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ் வில்லியனூரில் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுர்வேத மருத்துவமனை கட்டப்படுகிறது. அதற்கான கட்டுமான பணிகளை முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வில்லியனூர்,
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் தீயணைப்பு நிலையம் அருகே புதிதாக ஆயுர்வேத மருத்துவமனை கட்டப்படுகிறது. மத்திய அரசின் சுகாதார திட்டத்தின்கீழ் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் இந்த மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்றுக் காலை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டிட கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
தற்போது மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் ஆயுர்வேத மருத்துவ முறையை நாடி வருகிறார்கள். அதையொட்டி நமது அரசு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் ரூ.8 கோடி செலவில், 50 படுக்கை வசதிகளுடன் ஆயுர்வேத மருத்துவமனை வில்லியனூர் பகுதியில் அமைக்கப்படுகிறது.
இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டவுடன் வில்லியனூர் பகுதி மட்டுமல்லாமல் மங்கலம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, உழவர்கரை தொகுதிகளை சேர்ந்த மக்களும் பயன்பெற முடியும். கிராமப்புற மக்கள் பயன் அடைய வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு இந்த மருத்துவமனை இங்கு அமைக்கப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்துக்குள் மருத்துவமனை கட்டிடம் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், இந்திய மருத்துவமுறை ஆயுர்வேத பிரிவு இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன், கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.