குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா உத்தரவு
குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில்,
தமிழ்நாடு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரும், குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ஜோதி நிர்மலா நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் தலைமையில், கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின்போது கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் மூலம் நடைபெற்று வரும் சாலை பணிகள், கட்டிட பணிகள், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை வாரியாக கேட்டறிந்தார்.
மேலும், சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் தரமானதாக இருத்தல் அவசியம். திட்டமிடப்பட்ட வளர்ச்சி பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் தொடங்க வேண்டும். அதோடு வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட சார்பு கிராமங்கள், மலைவாழ்மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றிற்கு இணைப்பு சாலைகள், தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் நிலுவையில் இருந்தால் இந்த மாத இறுதிக்குள்ளாக 100 சதவீத பணிகளையும் முடிப்பதோடு அதற்கான தகவல்களையும் அளிக்க வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்களில் அடைப்பு மற்றும் உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சரி செய்து மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
கூட்டத்தில், வருவாய் அதிகாரி ரேவதி, உதவி கலெக்டர்கள் பவன்குமார் கிரியப்பனவர் (நாகர்கோவில்) சரண்யா அரி (பத்மநாபபுரம்) பிரதிக் தயாள் (பயிற்சி) மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story