நில அபகரிப்பில் ஈடுபட்டதால் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி முதல்-மந்திரி குமாரசாமியின் ஆதரவாளர் கைது


நில அபகரிப்பில் ஈடுபட்டதால் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி முதல்-மந்திரி குமாரசாமியின் ஆதரவாளர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2019 4:53 AM IST (Updated: 23 Feb 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

நில அபகரிப்பில் ஈடுபட்டதால் முதல்-மந்திரி குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளரை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூரு மைலசந்திராவில் வசித்து வருபவர் பிரபாகர் ரெட்டி. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த இவர், முதல்-மந்திரி குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். கடந்த ஆண்டு(2018) நடந்த சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டு பிரபாகர் ரெட்டி தோல்வி அடைந்தார். ரியல் எஸ்டேட், கட்டுமான தொழிலும் பிரபாகர் ரெட்டி ஈடுபட்டார்.

இதற்கிடையில், பெங்களூரு நகரில் பொதுமக்களை மிரட்டி நில அபகரிப்பு செய்யும் சம்பவங்களில் பிரபாகர் ரெட்டி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழிலுக்காக நடுத்தர குடும்பத்தினரை மிரட்டி, அவரது நிலங்களை அவர் எழுதி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மைலசந்திராவில் உள்ள பிரபாகர் ரெட்டியின் வீடு, கோரமங்களா, ராஜராஜேசுவரிநகர், எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள அவரது அலுவலகங்களில் குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது பிரபாகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் இருந்து ரூ.300 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அந்த சொத்துக்ளை அவர் முைறகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரபாகர் ரெட்டியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும்

இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் கிரீஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘பெங்களூருவில் நில அபகரிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக பிரபாகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. பிரபாகர் ரெட்டியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 40 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் போலீசில் புகார் அளிக்காமல் உள்ளனர். பிரபாகர் ரெட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

6 நாள் போலீஸ் காவல்

இந்த நிலையில் கைதான பிரபாகர் ரெட்டியை போலீசார் நேற்று பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் கோரினர். இதையடுத்து 6 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி பிரபாகர் ரெட்டியை காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story