விமான கண்காட்சியின் 3-வது நாள் நிகழ்ச்சியில் சாகசம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்த போர் விமானங்கள்
பெங்களூருவில் விமான கண்காட்சியின் 3-வது நாள் நிகழ்ச்சியில் போர் விமானங்கள் சாகசம் புரிந்து, பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
பெங்களூரு,
பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி கடந்த 20-ந் தேதி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்துகின்றன.
இந்த நிலையில் நேற்று கண்காட்சியின் 3-வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரையிலும் இந்திய போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின.
வெண் புகையை கக்கியபடி...
நேற்று டார்மியர், சி-17, துருவ் ஹெலிகாப்டர்கள், சு-30 விமானங்கள், இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (எல்.சி.எச்.), ரபேல், சாரஸ், இலகுரக போர் விமானங்கள், யாக், சாரங் உள்ளிட்ட போர் விமானங்கள் வானத்தில் வர்ண ஜாலம் நிகழ்த்தியது.
அந்த விமானங்கள் வெண் புகையை கக்கியப்படி வானில் கோடு போட்டும், வட்டமிட்டும் பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது. சாரங் ஹெலிகாப்டர்கள், நடுவானில் மோதுவது போலவும், குறுகிய இடைவெளியில் மிக நெருங்கி வந்தபடி விலகி சென்றது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது. போர் விமானங்கள் வானத்தில் தலைகீழாகவும், சுழன்றும் சாகசம் புரிந்தன. நேற்று நடந்த விமான கண்காட்சி மற்றும் விமான சாகசங்களை கண்டு ரசிக்க கன்னட திரைப்பட நடிகை சுதாராணி மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
பெண்களுக்கு பாராட்டு
நேற்றைய நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக விமானத்துறையில் சாதனை படைத்த பெண்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. போர் விமானங்கள் உற்பத்தி தொடர்பாக கருத்தரங்குகள் நடைபெற்றன. இன்று (சனிக்கிழமை) 4-வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எலகங்கா மெயின்ரோட்டில் நின்றபடியும் பொதுமக்கள் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story