கல்யாண் அருகே அட்டை பெட்டியால் மறைக்கப்பட்ட ரெயில்வே சிக்னல் விளக்கு பயங்கரவாதிகளின் சதிவேலையா?


கல்யாண் அருகே அட்டை பெட்டியால் மறைக்கப்பட்ட ரெயில்வே சிக்னல் விளக்கு பயங்கரவாதிகளின் சதிவேலையா?
x
தினத்தந்தி 23 Feb 2019 3:46 PM IST (Updated: 23 Feb 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

கல்யாண் அருகே ரெயில்வே சிக்னல் விளக்கு அட்டை பெட்டி மூலம் மறைக்கப்பட்டது. இது பயங்கரவாதிகளின் சதிவேலையா? என ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இருந்து பெங்களூரு யஸ்வந்த்பூருக்கு கல்யாண் வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. இந்த ரெயில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் கல்யாண் அருகே உள்ள கோபர் பகுதியில் வந்தது.

அப்போது அந்த வழியில் இருக்கும் சிக்னல் கம்பத்தில் எந்த விளக்கும் எரியாமல் இருப்பதை என்ஜின் டிரைவர் பி.எஸ். நாராயண் கவனித்தார். அவர் உடனடியாக ரெயிலின் வேகத்தை குறைத்தார். அப்போது சிக்னல் கம்பத்தில் விளக்கு உள்ள பகுதி, அட்டை பெட்டியால் மறைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மிகப்பெரிய தவறு நடந்து இருப்பதை உணர்ந்த அவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். மேலும் இதுகுறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் ரெயில்வே போலீசார், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஊழியர்கள் சிக்னல் கம்பத்தை விளக்கை மறைக்கும் வகையில் வைக்கப்பட்டு இருந்த அட்டை பெட்டியை அகற்றினர். அந்த பகுதியில் விஷமிகள் யாராவது உள்ளனரா? என்று தேடினர். ஆனால் யாரும் சிக்கவில்லை.

இந்தநிலையில் சம்பவம் குறித்து என்ஜின் டிரைவர் பி.எஸ். நாராயண் கூறியதாவது:-

2008-ம் ஆண்டு முதல் நான் என்ஜின் டிரைவராக உள்ளேன். எனவே சிக்னல் கம்பங்கள் உள்ள இடம் எனக்கு நன்றாக தெரியும். அன்று அந்த சிக்னல் எரியாமல் இருந்ததால் ஏதோ தவறு நடந்திருந்ததை உணர்ந்தேன். அதன்பிறகு தான் சிக்னலில் அட்டை பெட்டி இருப்பதை பார்த்தேன். ஒருவேளை நான் ரெயிலை நிறுத்தாமல் வேகமாக போயிருந்தால் சிக்னலை மீறி செல்லும் போது ரெயில் தானாகவே நின்று விடும். வேகமாக நிற்கும் பட்சத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிக்னல் கம்பம் அட்டை பெட்டியால் மூடி இருந்ததை கண்டுபிடித்து ரெயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தை தடுத்த என்ஜின் டிரைவரை ரெயில்வே உயர்அதிகாரிகள் மற்றும் பலர் பாராட்டி உள்ளனர்.

இந்தநிலையில் சிக்னல் கம்பத்தில் வேடிக்கையாக சமூக விரோதிகள் யாரும் அட்டை பெட்டியை வைத்தார்களா? அல்லது பயங்கரவாதிகளின் சதிவேலையா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்’ என்றார்.

Next Story