‘முதல்-மந்திரி பட்னாவிஸ், காதல் நயமிக்கவர்’ மனைவி அம்ருதா ருசிகர பதில்!


‘முதல்-மந்திரி பட்னாவிஸ், காதல் நயமிக்கவர்’ மனைவி அம்ருதா ருசிகர பதில்!
x
தினத்தந்தி 23 Feb 2019 4:12 PM IST (Updated: 23 Feb 2019 4:12 PM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பட்னாவிஸ் அரசியலில் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தவர்.

வங்கியாளர், பாடகி, சமூக சேவகி இப்படி பன்முக திறமை கொண்டவர் தான் அம்ருதா. இவர் வேறு யாரும் அல்ல. மராட்டிய முதல்-மந்திரியாக பதவியில் இருக்கும் தேவேந்திர பட்னாவிசின் மனைவி.

முதல்-மந்திரி பட்னாவிஸ் அரசியலில் நுழைவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தவர்.

மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் அவரது மனைவி அம்ருதா பட்னாவிசும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் ரிதேஷ் தேஷ்முக் இருந்தார்.

48 வயதான தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அவரது மனைவி 39 வயது அம்ருதாவிடம் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் ருசிகரமான கேள்விகளை கேட்டார். அதற்கு அம்ருதாவும் சுவையாக பதில் அளித்தார்.

உங்கள் கணவரை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

‘‘நான் என்ன உடை அணிகிறேன். எப்படி சிகை அலங்காரம் செய்கிறேன். உடல் எடை அதிகரித்திருக்கிறேனா, குறைந்திருக்கிறேனா என்று எதையும் அவர் கவனம் கொள்வதில்லை. அவர் என்னிடம் அன்பில் மூழ்குபவர். என்னில் நிகழும் மாற்றத்தை அவர் பார்ப்பதில்லை. அவர் மிகவும் காதல் நயம் கொண்டவர். அவர் எனக்கு கொடுத்த காதல் பரிசு தான் என் மகள் திவிஜா.

உங்கள் கணவரை பற்றி மக்கள் தெரிந்திராத ஒரு ரகசியம் பற்றி சொல்லுங்கள்?

அவர் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர். ஒருமுறை நாங்கள் இருவரும் ‘3 இடியட்ஸ்’ படம் பார்த்தோம். படத்தில் வரும் காட்சியை பார்த்து அழுது விட்டார். படம் முடியும் வரை கண்ணீரை துடைப்பதே என் வேலையாக இருந்தது.

கடைசியாக இருவரும் தியேட்டருக்கு சென்று என்ன படம் பார்த்தீர்கள்?

நாக்பூரில் இருந்தபோது ‘‘துக்டி ரக் பெர் ஹத் மேட் ரகோ’’ படத்தை ஒன்றாக சென்று பார்த்தோம். அவர் கடந்த 2014 ஆண்டு முதல்-மந்திரி பதவியேற்றதும் மும்பைக்கு வந்து விட்டோம். அதன்பின்னர் இருவரும் இன்றுவரை தியேட்டருக்கு செல்லவில்லை.

எந்த மாதிரியான படங்களை அவர் விரும்பி பார்ப்பார்?

அவருக்கு ‘‘ஜானே பீ டு டோ யாரோ’’, ‘‘3 இடியட்ஸ்’’ போன்ற நகைச்சுவை படங்கள் பிடிக்கும். ஆனால் நான் காதல் படங்களை தான் விரும்பி பார்ப்பேன்.

உங்களிடையே ஏற்படும் பிரச்சினையின் போது முதலில் மன்னிப்பு கேட்பது யார்?

அப்போது பட்னாவிஸ் குறுக்கிட்டு, வீட்டில் நடக்கும் பிரச்சினையில் கணவன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுவே வாழ்க்கையின் உண்மை நிலை என கூறினார்.

அம்ருதா சிரித்தபடி, வீட்டில் அவர் தலைவராக இருந்தாலும் அனைத்து முடிவுகளையும் நான் தான் எடுப்பேன் என்றார்.

இதேபோல தேவேந்திர பட்னாவிசிடமும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்.

உங்கள் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்துக்கு யார் செல்வீர்கள். அல்லது பள்ளி முதல்வர் உங்கள் இல்லத்துக்கு வருவாரா?

நான் உயர்பதவியில் இருப்பதனால் விதிமுறைகளை தளர்த்தி கொள்ளலாம் என்று அர்த்தம் இல்லை. பள்ளி நிர்வாகம் கண்டிப்பு நிறைந்தது. ஒரு தடவை மகளுக்காக 2 நாட்கள் விடுப்பு கேட்டபோது, அவர்கள் என்னிடம் வலுவான காரணத்தை கேட்டார்கள்.

யாரேனும் ஒருவருடன் கோவப்பட்டால் என்ன செய்வீர்கள்?

நான் சாதாரணமாக கோவப்பட மாட்டேன். ஆனால் சில நேரங்களில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த கோவத்தை காட்ட வேண்டியுள்ளது. சூழ்நிலையின் காரணமாக கோவப்படுவது போல நடித்தாலும், அடுத்த 15 நிமிடம் கழித்து என்னை பார்த்தால் நான் சாதாரணமாக தான் இருப்பேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story