வாலாஜா அருகே பரிதாபம் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
வாலாஜா அருகே நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
வாலாஜா,
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுபான்கான். இவரது மகன் அமீர் (வயது 20) டிரைவராக உள்ளார். இவரும் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த தர்மநீதி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அல்லாபக்ஸ் மகன் காலேக்ஷாவும் (20) மோட்டார்சைக்கிளில் ஆற்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தனர்.
இவர்களது மோட்டார்சைக்கிள் இரவு 8 மணியளவில் வாலாஜா சுங்கச்சாவடியை நெருங்கிக்கொண்டிருந்தது. வன்னிவேடு மோட்டூர் அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் அமீர், காலேக்ஷா ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே இருவரும் பலியானார்கள். இருவரும் உறவினர்களாவர். இது குறித்து வாலாஜா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.