நங்கவள்ளியில், சுடுகாடு வசதி கோரி சாமியானா பந்தல் போட்டு பிணத்துடன் பொதுமக்கள் சாலைமறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


நங்கவள்ளியில், சுடுகாடு வசதி கோரி சாமியானா பந்தல் போட்டு பிணத்துடன் பொதுமக்கள் சாலைமறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 23 Feb 2019 9:13 PM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளியில், சுடுகாடு வசதி கோரி, சாமியானா பந்தல் போட்டு பிணத்துடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேச்சேரி, 

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சி 1–வது வார்டு பாசக்குட்டை பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் நங்கவள்ளியில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையோரத்தில் உடல்களை புதைத்து வந்தனர்.

இதற்கிடையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தனி சுடுகாடு வசதி ஏற்படுத்தி தரக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 2 முறை இறந்தவரின் உடலை ரோட்டில் வைத்தும் போராட்டம் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் பாசக்குட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி என்கிற வெள்ளையன் (வயது 95) இறந்து போனார். நேற்று மதியம் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்கிடையில் அந்த பகுதியில் இறந்தவர்களின் உடலை புதைத்து வந்த இடத்தின் அருகே சாலையை அகலப்படுத்தி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதனால் அந்த இடம் மிகவும் குறுகி உடலை புதைக்க இடம் இல்லை எனக்கூறியும், எங்களுக்கு தனியாக சுடுகாடு வசதி வேண்டும் என்று கோரியும் அப்பகுதி மக்கள் நேற்று பிற்பகல் 12 மணி முதல் அந்த பகுதியில் இறந்தவரின் பிணத்துடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடுமையான வெயில் அடித்ததால் அந்த இடத்தில் சாமியானா பந்தலும் போட்டு இருந்தனர். பொதுமக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், மேட்டூர் தாசில்தார் அறிவுடை நம்பி, நங்கவள்ளி முன்னாள் பேரூராட்சி தலைவர் ரத்தினவேல், நங்கவள்ளி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 மாதத்திற்குள் அந்த பகுதி பொதுமக்களுக்கு தனியாக சுடுகாடு வசதி ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து இறந்தவரின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story