ஆத்தூர் அருகே, புத்திரகவுண்டம்பாளையத்தில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 931 காளைகள்


ஆத்தூர் அருகே, புத்திரகவுண்டம்பாளையத்தில் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 931 காளைகள்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 9:20 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே, புத்திர கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 931 காளைகள் சீறிப்பாய்ந்தன.

பெத்தநாயக்கன்பாளையம்,

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 71–வது பிறந்த நாளையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சேலம், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, துறையூர், திருச்சி, மதுரை, அலங்காநல்லூர், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 931 காளைகள் பங்கேற்றன. இதேபோல காளைகளை அடக்க பல்வேறு பகுதிகளில் இருந்து 800 மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கொடியசைத்து உறுதிமொழி வாசித்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டை நடத்தி வைத்தார்.

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பாய்ந்து சென்று அடக்கினர். சில காளைகளை அடக்க முடியவில்லை. அவைகள் வீரர்களை முட்டித்தள்ளி பாய்ந்தோடி சென்றன. இவ்வாறு காளையை அடக்க முயன்ற ஒரு சில வீரர்கள் மட்டும் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், கொலுசு, இரும்பு கட்டில், வீட்டு உபயோக பாத்திரங்கள் என சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் திரண்டு வந்து பார்வையிட்டு சென்றனர். இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை விழா குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இதேபோல பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்.கார்த்திக்குமார், சூரியமூர்த்தி தலைமையில் சுமார் 500–க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்றவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டில் சிறந்த 5 காளைகளுக்கும், 5 மாடுபிடி வீரர்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) சேலம் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஸ்கூட்டி, பிரிட்ஜ், பீரோ, தங்க நாணயம், சைக்கிள் ஆகிய பொருட்களை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம், எம்.எல்.ஏ.க்கள் ஆத்தூர் சின்னத்தம்பி, கெங்கவல்லி மருதமுத்து, ஏற்காடு சித்ரா, வீரபாண்டி மனோன்மணி, சங்ககிரி ராஜா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story