தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்


தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 4:35 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜிஜாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளில் பொதுமக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகளை சீரமைத்தல், திறந்தவெளி கிணறுகள் அமைத்தல், கிணறுகளை தூர்வாருதல், மின்மோட்டார்களை பழுது பார்த்தல் உள்ளிட்ட 1,335 குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.40.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாரண்டஅள்ளி பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு சின்னாறு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதல் தண்ணீர் வழங்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தர்மபுரி நகராட்சி பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.24 லட்சம் மதிப்பில் பஞ்சப்பள்ளி அணையில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணியும் ரூ.22 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் சங்கரன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் மண்டல அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story