மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது திருமாவளவன் பேட்டி


மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 3:45 AM IST (Updated: 23 Feb 2019 10:14 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திருமாவளவன் கூறினார்.

வேலூர், 

வேலூர் ஊரீசு கல்லூரியில் பாபுமாசிலாமணி என்பவர் எழுதிய ‘களத்தில் பிறந்த கவிதை’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் நூலை வெளியிட்டு பேசினார். இதில் பேராசிரியர் அப்துல்காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் திருமாவளவன் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு எத்தனை தொகுதி வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளோம். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எத்தனை தொகுதிகள் என்பது ஓரிரு நாட்களில் முடிவாகும். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் இணைவது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார்.

மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்துள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி தோற்கும் என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் எண்ணம் நிறைவேறாது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என அனைத்து மாநிலத்திலும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்திருக்கின்றன.

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்கு முன்பு, அ.தி.மு.க.வை, பா.ம.க. எப்படியெல்லாம் விமர்சித்தது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர்கள் அமைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் காட்பாடியில் பேட்டியளித்தார். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Next Story