பொதுத் தேர்வுகளை முறைகேடு இல்லாமல் நம்பகத்தன்மையுடன் நடத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


பொதுத் தேர்வுகளை முறைகேடு இல்லாமல் நம்பகத்தன்மையுடன் நடத்த வேண்டும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
x
தினத்தந்தி 24 Feb 2019 3:45 AM IST (Updated: 23 Feb 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்தேர்வுகளை எந்தவித முறைகேடும் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் பணியாற்ற உள்ள அறை கண்காணிப்பு அலுவலர்கள், துறை அலுவலர்கள், கட்டுகாப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள் போன்ற தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது. எனவே தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்களுக்கு தேவையான இருக்கை, மேஜை, குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்யவேண்டும்.

இந்த கல்வியாண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு இருவேறு முறைகளில் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அந்தந்த மாணவர்களுக்கு அதற்கான வினாத்தாள்கள் வழங்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மொழிப்பாடத்தில் 4 தேர்வுகள் பிற்பகலில் நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு முன்கூட்டியே இதுகுறித்து அறிவிக்க வேண்டும்.

மாணவர்கள் தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அறை கண்காணிப்பு ஆசிரியர்கள், மைய கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கும் முன்புஆசிரியர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அறையில் தங்களது செல்போனை வைத்து செல்ல வேண்டும். அவசர தொடர்புக்கு தரைவழி இணைப்பை பயன்படுத்த வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்நிலை பொதுத்தேர்வுக்கு 112 மையங்களும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு 128 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 15 தேர்வு மையங்களில் தேர்வு நடத்த பள்ளிகல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

பொதுத்தேர்வுகள் எந்தவித முறைகேடும், புகார்களும் இன்றி நம்பகத்தன்மையுடன் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story