விழுப்புரத்தில் சாரண, சாரணியர்கள் சார்பில் சிந்தனை நாள் பேரணி


விழுப்புரத்தில் சாரண, சாரணியர்கள் சார்பில் சிந்தனை நாள் பேரணி
x
தினத்தந்தி 24 Feb 2019 3:15 AM IST (Updated: 23 Feb 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சாரண, சாரணியர்கள் சார்பில் சிந்தனை நாள் பேரணி நடைபெற்றது.

விழுப்புரம், 

உலக சாரண, சாரணிய இயக்கத்தை தோற்றுவித்த சாரண தந்தை பேடல் பவலின் பிறந்த நாள் ஆண்டுதோறும் சிந்தனை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்ட சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் சிந்தனை நாள் பேரணி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இருந்து தொடங்கியது. இந்த பேரணிக்கு விழுப்புரம் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் உளுந்தூர்பேட்டை ரத்தினசெல்வி, திருக்கோவிலூர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 50 பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள், சாரண ஆசிரியர்கள் கலந்துகொண்டு பேரணியாக புறப்பட்டு விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சாரண மாணவர்களுக்கு மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் சான்றிதழ் வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் ஞானசேகரன், பொருளாளர் அன்பழகன், மாவட்ட பயிற்சி ஆணையர் தேன்மொழி, சாரணர் படை நிர்வாகிகள் சுப்பிரமணி, அசோகா, முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் துளசிங்கம் நன்றி கூறினார். முன்னதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story