தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்போது மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்போது மாணவர்கள் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Feb 2019 5:00 AM IST (Updated: 23 Feb 2019 11:34 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்றபோது, மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

கிருஷ்ணகிரி, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தொரப்பள்ளியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு, மக்கள் குறை கேட்டார். அவரிடம் பெண்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் மோடி ஆட்சியை அப்புறப்படுத்தக்கூடிய சூழல் வந்து விட்டது. மோடி ஆட்சி அப்புறப்படுத்தப்படுகின்ற போது தி.மு.க. தயவோடு, தி.மு.க. கூட்டணியில் மத்தியில் ஒரு சிறப்பான ஆட்சி அமையப்போகின்றது. தி.மு.க.வால் அடையாளம் காட்டப்படுபவர் தான் இந்த நாட்டின் பிரதமராக வரப்போகின்றார் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன், 21 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

தேர்தல் வைத்தால் அதிலும் அ.தி.மு.க. தோற்றுப்போய் விட்டால் ஆட்சியில் இருக்க முடியாது. ஏனென்றால், மெஜாரிட்டி இல்லாமல் மைனாரிட்டி நிலையில் இன்றைக்கு ஆட்சி இருக்கின்றது. எனவே, அந்த நிலையில் தேர்தல் வைக்கின்றார்களா?. வைக்கவில்லையா? என்பது தெரியாது. ஏனென்றால் இவர்கள் சொல்வதை தானே மோடி செய்கின்றார். மோடி இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கின்றார்கள் அது ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும், எந்தத் தேர்தல் வந்தாலும் நீங்கள் எல்லோரும் ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை எல்லாம் தேடி நாடி நான் வந்திருக்கின்றேன்.

கல்விக் கடனைப் பொறுத்தவரைக்கும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் வந்த போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால், நம்முடைய கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்தால் வங்கிகளில் மாணவர்கள் வாங்கியிருக்கின்ற கல்விக்கடனை தள்ளுபடி செய்வோம் என்று உறுதியை அப்பொழுதே தந்தோம். ஆனால், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த மோடி அதைச் செய்யவில்லை. இப்பொழுது நான் உறுதியாக சொல்லுகின்றேன். இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட நாங்கள் சொல்லப்போகிறோம். தி.மு.க. கூட்டணி ஆட்சி மத்தியில் அமைகின்ற போது நிச்சயமாக மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாநிலத்தில் இன்றைக்கு யாருடைய ஆட்சி நடைபெறுகின்றது, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கின்றது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியா அன்றைக்கு ஓட்டுப்போட்டீர்கள்? இல்லை. ஜெயலலிதா முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று சொல்லி ஓட்டுப்போட்டீர்கள்.

ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் அரசியல் ரீதியாக நமக்கு எதிரி தான். ஆனால், முதல்-அமைச்சராக இருந்து மறைந்தவர் அவர். அதுவும் மர்மமான முறையில் இறந்தவர் அவர். அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தி.மு.க. ஆட்சியில் சிறையில் தள்ளப்படுவார்கள்.

பாரதீய ஜனதா கட்சியினுடைய தலைவர் அமித்ஷா, நம்முடைய கூட்டணி கட்சித் தலைவர்களையெல்லாம் பார்த்து கிண்டல் செய்து கேலி செய்து பேசியிருக்கின்றார். திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஒவ்வொருவர் பெயரைச் சொல்லி விட்டு, சனிக்கிழமை மு.க.ஸ்டாலின் பிரதமர் என்று சொல்லியிருக்கின்றார். என் பெயரை ஞாபகமாக வைத்து சொன்னதற்கு அமித்ஷாவிற்கு நன்றி. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு விடுமுறையாம் ஏனென்றால் அன்றைக்கு பிரதமர் கிடையாதாம். இப்பொழுது இந்தியாவில் பிரதமருக்கு நிரந்தரமாக விடுமுறை. ஏனென்றால், பிரதமர் நாட்டில் கிடையாது. அவர் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கின்றார். இது அமித்ஷாவிற்கு தெரியவில்லை, மோடி வரமாட்டார் என்பதை அமித்ஷா ஒத்துக்கொண்டார். நாங்கள் தான் பிரதமர்களாக வரப்போகின்றோம் என்று அவரே வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார். அவருடைய தோல்வி அவருக்கே வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கின்றது.

நாட்டைப் பாதுகாக்க நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது. அப்படி வருகின்ற போது, மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்பேசினார்.

Next Story