கிருஷ்ணகிரியில் திருநங்கைகளுக்கு சிறு தொழில், வேலைவாய்ப்பு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது


கிருஷ்ணகிரியில் திருநங்கைகளுக்கு சிறு தொழில், வேலைவாய்ப்பு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 23 Feb 2019 11:39 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் திருநங்கைகளுக்கான சிறு தொழில், வேலைவாய்ப்பு பயிற்சி கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ், திருநங்கைகளுக்கான, ஒரு நாள் சிறு தொழில் மற்றும் வேலை வாய்ப்பிற்கான பயிற்சி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மூன்றாம் பாலினர் கணக்கெடுப்பு புதுப்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப அவர்களுக்கு வீடு கட்ட, பட்டா வழங்கப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து திருநங்கைகள் 10 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் உதவித்தொகையை தொழில் தொடங்குவதற்காக கலெக்டர் வழங்கினார். இதில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மோனிஷா, மாவட்ட தொழில் மைய பொறியாளர் குமார், தாட்கோ மேலாளர் ராஜகுரு, மனையியல் வல்லுனர் பூமதி, இந்தியன் வங்கி பயிற்சி நிலைய இயக்குனர் ராமஜெயம் கலந்து கொண்டு தொழில் மற்றும் கடனுதவி வாய்ப்புகள் பற்றி கூறினார்கள்.

கிருஷ்ணகிரி நீதிமன்றம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, சார்பு நீதிபதி தஸ்னீம் கலந்து கொண்டு, இலவச சட்ட மையம் மூலம், பெறக் கூடிய உதவிகள் பற்றி பேசினார். திட்ட அலுவலர் மகளிர் திட்டம் உமா மகேஸ்வரி குழு அமைத்து செயல்படுவது, தொழில் தொடங்க கடன் பெறுவது மற்றும் சிறு தொழில் மூலம் வருமானம் ஈட்டுவது பற்றி பேசினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமூகநல அலுவலர் அன்பு குளோரியா செய்திருந்தார்.

Next Story