ரெயில்வே கேட் கீப்பரிடம் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை


ரெயில்வே கேட் கீப்பரிடம் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Feb 2019 2:45 AM IST (Updated: 24 Feb 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே ‘கேட்கீப்’பரிடம் தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

கடலூர், 

ரெயில்வே கேட்டில் பணியில் இருக்கும் ‘கேட் கீப்பர்கள்’ சமீப காலமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். ரெயில் வரும் நேரங்களில் அவர்கள் கேட்டை அடைப்பதினால், அவருக்கும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இது பல இடங்களில் மோதலாக வெடித்து வருகிறது.

இந்த நிலையில் ரெயில்வே கேட்டில் பணியில் இருக்கும் ‘கேட் கீப்பர்’களிடம் தகராறு செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே சுத்துக் குளம் ரெயில்வே கேட்டில் நேற்று ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, ரெயில்வே கேட்டில் பணியில் இருக்கும் ‘கேட் கீப்பர்கள்’ தன்னிச்சையாக கேட்டை மூடுவதில்லை. அருகில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகள் அந்த வழியாக ரெயில் வருவது பற்றி தகவல் கொடுப்பதன் பேரில் தான் கேட்டை மூடுகிறார்கள். எனவே அவர்களிடம் வீண் தகராறு செய்யாமல், அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். கேட் மூடியிருக்கும் நேரத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்றால், அந்த வழியாக வரும் ரெயில் மோதி பெரிய விபத்துக்கள் நடக்க நேரிடும். ஆகையால் கேட்டில் பணியில் இருக்கும் ஊழியரிடம் ஏதேனும் பிரச்சினையில் ஈடுபட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும், ரெயில்வே தண்டவாள பகுதியை கடந்து செல்லும் போது ரெயில் வருகிறதா என்று பார்த்து மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று ரெயில்வே போலீசார், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி னர். இதில் எஸ்.ஆர்.எம்.யூ. கடலூர் செயலாளர் சுந்தரராஜன் மற்றும் ரெயில்வே போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Next Story