நசரத்பேட்டை அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
நசரத்பேட்டை அருகே சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அசார்அலி(வயது 50). இவருடைய மனைவி சிராஜ்(43). இவர்களது மகன் சியால் அக்(23).
சிராஜ்க்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
கார் தீப்பிடித்து எரிந்தது
காரை சியால் அக் ஓட்டினார். பின்னால் சிராஜ் மற்றும் அவருடைய மகள் அமர்ந்து இருந்தனர். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை அருகே சென்றபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
உடனடியாக காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்கி பார்த்தனர். இதற்கிடையில் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
முன்பகுதி நாசம்
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story