திருவொற்றியூரில், தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்


திருவொற்றியூரில், தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:45 AM IST (Updated: 24 Feb 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில், மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக சாலையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் பள்ளிகள், மசூதி, மார்க்கெட் உள்ள சாலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தடுப்புச்சுவர் அமைப்பதால், அந்த வழியாக நடந்து செல்பவர்கள்கூட சாலையை கடப்பதற்கு அரை கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்து கடக்கவேண்டிய நிலை உள்ளதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்துவரும் பெற்றோர்கள், இளைஞர்கள் எதிர் சாலை வழியாக மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வருவதால் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலை மறியல்

எனவே தாங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு எதிரே சாலையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, பொதுமக்கள் சார்பில் திருவொற்றியூர் போலீசார் மற்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அந்த பகுதியில் சாலை தடுப்புச்சுவர் அமைக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தாங்கல் பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story