தமிழக அரசின் சிறப்பு நிதிக்காக உத்தமபாளையம் பேரூராட்சியில் விண்ணப்பிக்க குவிந்த பொதுமக்கள்


தமிழக அரசின் சிறப்பு நிதிக்காக உத்தமபாளையம் பேரூராட்சியில் விண்ணப்பிக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 24 Feb 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் சிறப்பு நிதி ரூ.2 ஆயிரத்துக்காக விண்ணப்பம் செய்ய உத்தமபாளையம் பேரூராட்சியில் பொதுமக்கள் குவிந்தனர்.

உத்தமபாளையம்,

தமிழக அரசு பட்ஜெட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் மற்றும் விவசாய கூலிதொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் சிறப்பு நிதி உதவியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வசிக் கும் பொதுமக்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, தேவாரம், காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பேரூராட்சிகளில் விண்ணப்பம் அளிக்க பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகிகள் தனியாக மேஜை, நாற்காலி அமைத்து பொதுமக்களிடம் விண்ணப்பங் களை பெற்றனர்.

குறிப்பாக உத்தமபாளையத்தில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர். ரேஷன் கார்டு விவரம், வங்கிகணக்கு விவரம், ஆதார் அடையாள அட்டை எண் ஆகியவற்றை சேர்த்து பொதுமக்கள் விண்ணப்பம் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் மட்டும் சிறப்பு நிதி உதவி பெற விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர். இதனை வரவேற்கிறோம். மேலும் விண்ணப்பம் அளிக்க சிறப்பு முகாமை நடத்த வேண்டும்’ என்றனர்.

Next Story