மேல்மருவத்தூர் அருகே கார்-பஸ் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


மேல்மருவத்தூர் அருகே கார்-பஸ் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2019 3:30 AM IST (Updated: 24 Feb 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் அருகே கார்-பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.

மதுராந்தகம்,

மன்னார்குடியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி பத்மாவதி (வயது 58). இவர் வெளிநாட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னைக்கு வந்தார். அவரை அழைத்து செல்ல குணசேகரனின் மருமகன் வேல்முருகன், மகன் மணிகண்டன்(36) மற்றும் வேல்முருகனின் மகள் திரிஷா(12) ஆகியோர் மன்னார்குடியில் இருந்து காரில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

வேல்முருகன் காரை ஓட்டி வந்தார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பத்மாவதியை அழைத்து கொண்டு மீண்டும் மன்னார்குடிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மேல்மருவத்தூரை அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் செல்லும் போது கார் கட்டுபாட்டை இழந்து தடுப்புசுவர் மீது மோதி எதிர்திசையில் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் மீது மோதியது.

இதில் காரில் இருந்த பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். திரிஷா படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சந்தோஷ் ஹதிமானி, மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திரிஷா சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story