புத்தாநத்தம் அருகே மரக்கிளைகளை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியல்


புத்தாநத்தம் அருகே மரக்கிளைகளை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

புத்தாநத்தம் அருகே மரக்கிளைகளை சாலையில் போட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் கருமலை அருகே அலங்கம்பட்டி பிரிவு என்ற இடத்தில் இருந்து செல்லும் சாலை அமைக்கும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் இன்னும் அந்த பணிகள் முடிக்கப்படவில்லை. ஏற்கனவே அப்பகுதி மக்கள் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின்னர் பணிகள் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் சாலையில் மண்கொட்டிக்கொண்டிருந்த லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தற்போது சாலை பணிகள் நடைபெறவில்லை. சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் நேற்று மதியம் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் அலங்கம்பட்டி பிரிவு அருகே மறியலில் ஈடுபட்டனர். மேலும் மரக்கிளைகளையும் சாலையில் போட்டு சுட்டெரிக்கும் வெயிலிலும் தங்களின் மறியலை தொடர்ந்தனர். தகவல் அறிந்த வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், அரசு வேலைக்கு, அதுவும் சாலை அமைப்பதற்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. அந்த லாரியை ஏன் பிடிக்க வேண்டும். எங்களுக்கு தரமான சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து வருவாய்த்துறையினரை அழைத்து சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story