2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றிய புகாரில் துளி கூட உண்மை இல்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக கூறப்பட்ட புகாரில் துளி கூட உண்மை இல்லை என்று கோவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
கோவை,
கோவையில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை அரசு ஆஸ்பத்திரியில் 2 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக எழுந்த புகாரில் துளி கூட உண்மை இல்லை. இங்கு ரத்தம் ஏற்றியதன் மூலம் அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்படவில்லை. திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை 700 கிராம் எடையுடன் பிறந்தது. மேலும் இதயத்தில் ஓட்டை, சளி தொந்தரவு இருந்து உள்ளது.
2½ மாதங்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு ரத்தம் வழங்கிய கொடையாளருக்கு பல்வேறு பரிசோதனை நடைபெற்றது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது தெரியவந்து உள்ளது. குழந்தைக்கு பல இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட காரணம் என்ன? என்பது தெரியவில்லை. குழந்தையின் குடும்பத்தினர் ஒத்துழைத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரி அல்லது தனியார் ஆஸ்பத்திரி உள்பட அவர்கள் எங்கு விரும்பினாலும் சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.