காரமடை அருகே 3,500 ஆண்டு பழமையான குகையில் ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் அழியும் அபாயம்


காரமடை அருகே 3,500 ஆண்டு பழமையான குகையில் ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் அழியும் அபாயம்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:45 AM IST (Updated: 24 Feb 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

காரமடை அருகே 3,500 ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கோவை,

கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி கல்வெட்டியில் பட்டயப்படிப்பு பொறுப்பாசிரியர் ரவி தலைமையில் மாணவர்கள் கோவை மாவட்டம் காரமடையை அடுத்த கோவனூர் பொன்பரப்பிமலை அடிவாரத்தில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த குகையில் பழங்கால வண்ண ஓவியங்கள் காணப்பட்டன. அவற்றின் மீது கரி படிந்து அழியும் நிலையில் இருந்தன.

இது குறித்து பொறுப்பாசிரியர் ரவி கூறியதாவது:–

கோவை மாவட்டம் காரமடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்பரப்பி மலை அடிவாரத்தில் ஒரு குகை உள்ளது. அந்த குகையின் நுழைவு வாயிலில் வண்ண ஓவியங்கள் வரையப் பட்டு உள்ளன. அந்த குகை எவ்வளவு தூரத்துக்கு இருக்கும் என்று கூற முடியாது. குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் இருளாக இருப்பதால் அதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.

அங்கு வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் 3,500 ஆண்டு பழமையானது. அவை இன்றளவும் அழியாமல் இருப்பது முன்னோர்களின் தொழில்நுட்பத்தை காட்டுவதாக இருக்கிறது. இது போன்ற அழியாத வண்ணத்தை இன்று உருவாக்க முடியுமா? என்றால் முடியாது. அந்த ஓவியங்கள் வெள்ளை மற்றும் சந்தன நிறத்தில் வரையப்பட்டு உள்ளது.

இந்த ஓவியங்கள் பண்டைய இனக்குழு கால கால்நடை சமுதாயத்தை விவரிக்கிறது. அந்த ஓவியங் களில் ஆண் மற்றும் பெண் மான்கள், எருதுகள் சண்டை இடும் காட்சி, பெரிய திமிலை உடைய எருது, யானை, மலைதேள், விலங்குகளின் மீது அமர்ந்து மனிதர்கள் வில் மூலம் வேட்டையாடும் காட்சிகள், மனிதன் தீப்பந்தத்துடன் இருக்கும் காட்சி, விலங்குகள் வரிசையாக செல்லும் காட்சிகள் அந்த கால மனிதர்கள் விலங்குகளோடு கொண்டுள்ள தொடர்பை காட்டுகின்றன.

தான் கண்ட காட்சிகளை, தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் விலங்குகளின் படங்களை அந்த கால மனிதர்கள் குகையின் மேற்பரப்பில் வரைந்து உள்ளனர். இவை விவசாய சமுதாயத்திற்கு முற்பட்ட இனக்குழு காலமாக கருதப்படுகிறது. உணவு தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் சடங்கு முறைகளுக்காகவும் இந்த ஓவியங்கள் அந்த கால இனக்குழு மக்களால் வரையப்பட்டுள்ளன.

ஆனால் அந்த ஓவியங்கள் மீது தற்போது புகை படிந்து காணப்படுகின்றன. இதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்த குகை ஓவியங்கள் முறையாக பராமரிக்காமல் உள்ளன. அதை முழுமையாக பராமரிக்க வேண்டும். முன்னோர்கள் வரைந்த ஓவியத்தின் நுட்பத்தை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story