கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது தெங்குமரஹாடா வனப்பகுதியில் விடப்பட்டது
கோவை அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது. அதை வனத்துறையினர் தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட்டனர்.
பேரூர்,
கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தீத்திப்பாளையம், மாதம்பட்டி, குப்பனூர், கரடிமடை, மத்திபாளையம், மோளபாளையம், பெருமாள்கோவில்பதி, பச்சினாம்பதி, மூங்கில்மடை குட்டை, காளிமங்கலம் உள்பட பல்வேறு மலையடிவார கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது மலையடிவர பகுதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குப்பனூரில் உள்ள சதாசிவம் என்பவரின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தைப்புலி, 2 ஆடுகளை அடித்து கொன்றது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து அந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
இதுபோல கடந்த மாதம் பூலுவபட்டி அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி 3 ஆடுகள், 4 கோழிகளை அடித்து கொன்றது. அத்துடன் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. எனவே அந்த சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக பூலுவபட்டி சந்தைப்பேட்டை அருகே வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.
ஆனால் அந்த சிறுத்தைப்புலி, அங்கிருந்து பெருமாள்கோவில் பதி அருகே உள்ள பச்சினாம்பதிக்கு சென்றுவிட்டது. எனவே வனத்துறையினர் பூலுவபட்டியில் இருந்த கூண்டை எடுத்து கடந்த 26–ந் தேதி பச்சினாம்பதியில் மலையடிவார பகுதியில் வைத்தனர். அத்துடன் கூண்டில் சிறுத்தைப்புலி சிக்குகிறதா? என்பது குறித்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்த கூண்டில் சிறுத்தைப்புலி சிக்கியது. இதை அறிந்த வனச்சரக அதிகாரி செந்தில்குமார், வனவர் சோழமன்னன், வனக்காப்பாளர் செந்தில் பெருமாள் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கூண்டில் சிக்கிய அந்த சிறுத்தைப்புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது. சிறுத்தைப்புலி சிக்கியது குறித்து அந்தப்பகுதியில் காட்டுத்தீ போன்று தகவல் பரவியது. இதனால் அதை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டனர். அந்த சிறுத்தைப்புலி, பொதுமக்களை பார்த்ததும் ஆக்ரோஷமாக உறுமியது.
பின்னர் வனத்துறையினர் சிறுத்தைப்புலியை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘கூண்டில் சிக்கியது ஆண் சிறுத்தைப்புலி. அதற்கு 6 வயது இருக்கும். மிகவும் திடகாத்திரமாக இருக்கிறது. அதை தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட்டதும் வேகமாக பாய்ந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது’ என்றனர்.