நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 9:47 PM GMT (Updated: 23 Feb 2019 9:47 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி, முடுக்குமீண்டான்பட்டி, நாலாட்டின்புத்தூர், திட்டங்குளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால், பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாகவும், மதுவுக்கு அடிமையானவர்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் ஜெயலலிதா கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதனை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றாமல், பள்ளிக்கூடம், கோவில் அருகிலும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களிலும் மதுக்கடைகளை திறந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் மதுக்கடைகள் மூடப்படும்.

தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் வீடுதோறும் உள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பா.ஜ.க. அரசு அதனை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் மக்கள் பணத்தை வீணடித்து, 2 முறை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியும் எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவும் இல்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆட்சியை காப்பாற்றுவதற்காக மத்திய பா.ஜ.க. அரசுக்கு காவடி தூக்கி வருகின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டதாக, மறைந்த என்னுடைய தந்தை கலைஞர் கருணாநிதி என்னிடம் வேதனையுடன் கூறினார். மத்திய பா.ஜ.க. அரசால் தமிழக மக்களின் கனவுகள் கலைந்து கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்கள் பொதுமக்கள் போராடியபோது முதல்-அமைச்சரோ, அமைச்சரோ, அதிகாரியோ யாருமே நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மாறாக 100-வது நாள் போராட்டத்தில் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றபோது, ஈவு இரக்கமின்றி மனித தன்மையற்று துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றனர்.

இது பன்னாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்து கொண்டு மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணைந்து திட்டமிட்டு செய்த சதி.

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவையும் யாராலும் காப்பாற்ற முடியாது. சமீபத்தில் காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இந்த மண்ணைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தார். அவர் நமது நாட்டைக் காப்பதற்காக உயிர் தியாகம் செய்தார். ஆனால் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நமது நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Next Story