நாடாளுமன்ற தேர்தலில் ‘40 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம்’ டாக்டர் ராமதாஸ் உறுதி


நாடாளுமன்ற தேர்தலில் ‘40 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம்’ டாக்டர் ராமதாஸ் உறுதி
x
தினத்தந்தி 24 Feb 2019 5:00 AM IST (Updated: 24 Feb 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புதுச்சேரி,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கத்தில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:–

பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த போது இங்கு வந்து இருந்த தொண்டர்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியதை காண முடிந்தது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தான் அதற்கு காரணம் என்பதை அறிவேன். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள நமது கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபடுவோம்.

நீங்கள் வளர்த்த கட்சிக்கு தற்போது இவ்வளவு மரியாதை. கூட்டணிக்கு எங்கள் பக்கம் வாங்க என்று ஒரு அணி. எங்கள் பக்கம் வாங்க என்று மற்றொரு அணி. உங்களது அயராத உழைப்பில் வளர்ந்தது இந்த கட்சி. வளர்ச்சி இல்லாவிட்டால் யாரும் நம்மை கூட்டணிக்கு அழைக்கமாட்டார்கள். நாம் தற்போது 3–வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளோம்.

தற்போது கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என கூட்டணி உடன்பாட்டை கேள்விப்பட்டதும் பலருக்கு வயிறு எரிகிறது. 10 தொகுதிகள் கேட்டோம். கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நமக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ராஜ்யசபா தொகுதி 1. இது 2 தொகுதிக்கு சமம்.

கூட்டணியில் ஒதுக்கப்படும் கட்சிகளுக்கு தொகுதிகளின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும். 40 தொகுதிகளிலும் நாம் வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்ய வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினர் பா.ம.க. தொண்டர்களை பார்த்து நமது கட்சி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் நிலையில் பணியாற்ற வேண்டும்.

அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியானது இயற்கையானது. இந்த கூட்டணி அமையும் முன்பே அ.தி.மு.க. பா.ம.க. தொண்டர்கள் கை கோர்த்து விட்டோம். நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் நமது கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுத்ததில்லை.

நாம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகள் மட்டுமல்ல, 21 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும். அப்போது தான் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் கை கோர்க்கும் நிலை மேலும் பலப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலுக்காக எடுத்துள்ள கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்து பா.ம.க. உள்ளது. அதாவது நமது கட்சியின் வயது 30 ஆண்டுகள். நமது கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். ஆட்சிக்கு வருவதால்தான் நம் இலக்கை எட்டமுடியும்’ என்றார்.

பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:–

தமிழகத்தின் நலனைக்கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்திருக்கிறது. இதில் பா.ஜ.க.வும் இணைந்து உள்ளது. மேலும் பல கட்சிகள் இணைய உள்ளன. டாக்டர் ராமதாசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக உருவெடுத்து உள்ளது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற அதிகாரத்தை கைப்பற்றுவது அவசியம். தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது என இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். 7 தமிழர்கள் விடுதலை, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடித்தல், நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அ.தி.மு.க. தலைமைக்கு பா.ம.க. முன்வைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story