தந்தையின் ஆபாச படத்தை பரப்பி விடுவதாக மிரட்டி சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.5 லட்சம் பறித்த பெண் உள்பட 5 பேர் கைது
தந்தையின் ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பிவிடுவோம் என சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் அனில் (வயது40). சினிமா தயாரிப்பாளர். இவரது தந்தை தன்ராஜ் (68). கடந்த ஆண்டு முதியவருக்கு லக்கி மிஸ்ரா (வயது32) என்ற மசாஜ் செய்யும் பெண் அறிமுகம் ஆனார். அந்த பெண் முதியவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக முதியவர் அந்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து உள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு கும்பல், தயாரிப்பாளர் அனிலை தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர்கள், அனிலின் தந்தை தன்ராஜின் ஆபாச படம் தங்களிடம் இருப்பதாகவும், அதை சமூக வலைத்தளத்தில் பரப்பாமல் இருக்க ரூ.25 கோடி தரவேண்டும் எனவும் மிரட்டினர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் அம்போலி போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசார் கொடுத்த யோசனையின்படி அவர் ஓட்டல் ஒன்றில் வைத்து மிரட்டல் கும்பலை சந்தித்து ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு சென்ற போலீசார், தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த கும்பலை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஹூசேன் மக்ரானி (36), யுவராஜ்சிங் (30), ரெகுமான் அப்துல் சேக் (45), கேவல்ராம்குமார் (60) மற்றும் முதியவருக்கு மசாஜ் செய்த பெண் லக்கி மிஸ்ரா என்பது தெரியவந்தது.
லக்கி மிஸ்ரா மசாஜ் செய்யும் பெண் போல நடித்து தயாரிப்பாளரின் தந்தையிடம் பழகி உள்ளார். அவர் முதியவரை மசாஜ் செய்யும்போது அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை கூட்டாளிகளிடம் கொடுத்துள்ளார். மற்ற 4 பேரும் அந்த வீடியோவை ஆபாச படம் போல சித்தரித்து உள்ளனர். பின்னர் அந்த வீடியோவை பரப்பிவிடுவோம் என மிரட்டி தயாரிப்பாளரிடம் பணம் பறித்தது விசாரணையில் தொியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் 5 பேரும் இதேபாணியில் வேறு யாரிடமும் பணம் பறித்துஉள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story