அழகியமண்டபத்தில் விபத்து: லாரி மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி


அழகியமண்டபத்தில் விபத்து: லாரி மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2019 4:30 AM IST (Updated: 24 Feb 2019 9:53 PM IST)
t-max-icont-min-icon

அழகியமண்டபத்தில் நேற்று அதிகாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே முளகுமூடு, கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், நகை தொழிலாளி. இவரது மனைவி ராஜேஷ்வரி. இவர்களுக்கு தினேஷ் குமார் (22) என்ற மகனும், திவ்ய பாரதி (21) என்ற மகளும் இருந்தனர். தினேஷ் குமார் தக்கலை அருகே உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். திவ்ய பாரதி ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் குருந்தன்கோட்டில் உள்ள குடும்ப கோவிலுக்கு சென்றார். அங்கு வழிபாடு முடித்த பின்பு நேற்று அதிகாலையில் வீட்டுக்கு காரில் புறப்பட்டனர். காரை தினேஷ் குமார் ஓட்டினார். அதில் தினேஷ்குமாரின் தாய் ராஜேஷ்வரி, தங்கை திவ்ய பாரதி, மற்றும் உறவினர்கள் இருந்தனர். காரை பின்தொடர்ந்து சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கார் தக்கலை அருகே அழகியமண்டபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அங்கு சாலையில் ஒரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. காரை ஓட்டி வந்த தினேஷ் குமார், லாரி நிற்பதை கவனிப்பதற்குள் கார் லாரி மீது மோதியது.

இதில் காரில் இருந்த தினேஷ்குமார், ராஜேஷ்வரி, திவ்ய பாரதி மற்றும் உறவினர்கள் செல்லப்பன், சுஜாதா(36), சரஸ்வதி (65) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அத்துடன், பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த சுரேஷ்குமார் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, காயமடைந்தவர்களை சுரேஷ்குமாரும் பொதுமக்களும் மீட்டு தக்கலை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் பெற்றோர் கண் முன்பு தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மேலும், படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் லாரி டிரைவர் காட்டாத்துறையை சேர்ந்த செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story