கொடைக்கானல் அருகே மயிலாடும்பாறை பகுதியில் காட்டுத்தீ
கொடைக்கானல் அருகே, மயிலாடும்பாறை பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. அதேபோல் நகர் பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக விலை உயர்ந்த மரங்கள், புற்கள், புதர்கள் தீயில் கருகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் மயிலாடும்பாறை பகுதியில் சாலையோரத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வனப் பகுதி முழுவதும் தீ பரவியது.
இதன் காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின. அத்துடன் வனவிலங்குகளும் அங்கிருந்து வெளியேறின. காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தீ விபத்து குறித்து தகவலறிந்த வனச்சரகர் ஆனந்தகுமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் விரைந்து வந்து வனப்பகுதியில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து கொடைக்கானல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு வனப்பகுதியில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. முன்னதாக நகர் பகுதியில் சில இடங்களில் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.
வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கூடுதல் வன ஊழியர்களை நியமிக்க வேண்டும். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் ‘ஹெலிகாப்டர்’ மூலம் தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story