சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் ஆத்திரம்: கள்ளக்காதலனை எரித்து கொல்ல முயற்சி பெண் கைது


சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் ஆத்திரம்: கள்ளக்காதலனை எரித்து கொல்ல முயற்சி பெண் கைது
x
தினத்தந்தி 25 Feb 2019 4:30 AM IST (Updated: 25 Feb 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

இனிமேல் சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் கள்ளக்காதலனை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் என்ற சந்திரசேகர் (வயது 43). கொத்தனார். இவருடைய மனைவி பரிமளம். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்தநிலையில் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி செல்வி (45). சித்தாள் வேலை செய்து வரும் இவருக்கும், சந்திரசேகருக்கும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வி, சந்திரசேகர் வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது சந்திரசேகர் என்னை பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். எனவே நீ இனிமேல் என்னை சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சந்திரசேகர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.

Next Story