பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி கலெக்டர் வழங்கினார்


பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:15 AM IST (Updated: 25 Feb 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது. நிதியை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கும் பொருட்டு, முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

பிரதமர் மோடி உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. பிரதமர் தொடங்கி வைத்த பின்னர், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 175 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதியாக தலா ரூ.2 ஆயிரத்திற்கான ஆணையை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 2 எக்டேருக்கு மிகாமல் நிலம் வைத்து விவசாயம் செய்யும் தகுதியான சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்குவதற்காக இது வரை 68,190 சிறு, குறு விவசாயிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும், பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கிராமத்திலும், கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தகுதியான விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விடுப்பட்டுள்ள தகுதியான விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 27-ந்தேதி தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் நெடுஞ்செழியன், துணை இயக்குனர்கள் கணேசன், ஜஸ்டின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story