பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 கலெக்டர் வழங்கினார்


பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தின்கீழ் 100 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000 கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Feb 2019 4:30 AM IST (Updated: 25 Feb 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி நிதி யுதவி திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 100 விவசாயிகளுக்கு முதல் தவணையாக தலா ரூ.2,000-க்கான சான்றினை கலெக்டர் அன்பழகன் வழங்கினார்.

கரூர்,

நாட்டில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 சிறப்பு நிதியை, தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அந்த சிறப்பு நிதி பெறும் விவசாய பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்தன. இதில் விவசாய பயனாளி 2 எக்டர் அல்லது 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். 2019-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி அன்று வருவாய்த்துறை நில ஆவணங்களில் பட்டாவில் பெயர் உள்ளவராக இருக்கவேண்டும் என்பன உள்ளிட்டவை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. மேலும் 2015-2016 ம் ஆண்டு வேளாண்மை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படியும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தகுதியுடைய விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் மத்திய அரசின் சிறப்பு நிதி பெற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேசம் மாநிலத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் 100 விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி ரூ.2,000-க்கான சான்றுகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வைத்து விவசாயிகளுக்கு வழங்கினார். இதற்கிடையே “மன்கிபாத்” என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை நேரலையாக விவசாயிகளுக்கு ஒலிபரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியை பெறுவது எப்படி? என்பன உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். அப்போது நிதிபெறுபவரின் நில பட்டா குறித்து விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது.

1 லட்சத்து 8 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்ததாவது:-

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டமானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதியிலிருந்து கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. இதன் நோக்கமானது சிறு-குறு விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் அவர்களது வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே ஆகும். ஆண்டு தோறும் ரூ.6,000 என மூன்று தவணைகளில், ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2000 (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை) இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதில் முதல் தவணையானது 2018-19 ம் நிதியாண்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் வருகிற மார்ச் 31-ந்தேதி வரையிலான காலாண்டிற்க்கு ரூ.2,000 வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் 2 எக்டர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 636 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்ற பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் 40,278 விவசாயிகள் தகுதியுடைய பயனாளிகளாக தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கரூர் தாலுகாவில் 4,056 பயனாளிகள், அரவக்குறிச்சி தாலுகாவில் 6,424 பயனாளிகள், மண்மங்கலம் தாலுகாவில் 7,284 பயனாளிகள், குளித்தலை தாலுக்காவில் 8,435 பயனாளிகள், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 7,781 பயனாளிகள் மற்றும் கடவூர் தாலுகாவில் 6,298 பயனாளிகள் தற்போது வரை இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல் தவணை நிதியானது இன்று (நேற்று) முதல் வழங்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்றைய நிகழ்ச்சியில் 100 விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெயந்தி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன்ராம், உதவி இயக்குநர் கலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகானந்தம், வோளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், உழவர் பயிற்சி மைய துணை இயக்குநர் குழந்தைவேலு உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story