சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் பிரதம மந்திரி நிதித்திட்ட சிறப்பு முகாம்
சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் பிரதம மந்திரி நிதித்திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம்,
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் நடப்பு நிதியாண்டில் பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டர் வரை நிலமுள்ள சிறு, குறு விவசாய குடும்பத்திற்கு, வருடத்திற்கு ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில் ரூ.6,000 வழங்கப்படும்.
1.12.2018 முதல் 31.3.2019 வரையிலான காலத்திற்கு முதல் தவணை வழங்கப்படும். கிராம கணக்குகளின்படி 2 ஹெக்டர் வரை விவசாயம் செய்ய தகுந்த நிலம் வைத்துள்ள கணவன், மனைவி, சிறு குழந்தைகள் ஆகியோர் கொண்ட குடும்பம் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர் ஆவர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாய குடும்பம் வாரியாக கணக்கெடுப்பு ஏற்கனவே, 10.2.2019 முதல் எடுக்கப்பட்டு பயனாளிகள் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது மேலும், அதிக அளவிலான சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் பொருட்டு இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இச்சிறப்பு முகாம்கள் அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து உதவி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களிலும் விவசாயிகளிடமிருந்து இத்திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது நில உடைமை விவரம், நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு எண், ஆதார் எண், வயது, தொலைபேசி எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை வெள்ளைத்தாளில் எழுதி வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்தின் விதிகளின்படி தற்போது கணக்கெடுப்பு செய்து முடிக்கப்பட்ட தகுதியுடைய மற்றும் தகுதியற்ற பெயர் பட்டியல் உரிய காரணங்களுடன் கிராமத்தின் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான கிராம நிர்வாக அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்கள் போன்ற இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அந்த பட்டியலை சரிபார்த்து தங்களது பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது விவரங்கள் ஏதும் தவறுதலாக இருந்தாலோ சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தாரிடம் எழுத்து மூலமாக தங்களது ஆட்சேபனை அல்லது கோரிக்கையை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் அவை மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தகுதியிருப்பின் பயனாளிகளின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எனவே, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்ட சிறப்பு முகாம்களில் சிறு, குறு விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது விவரங்களை வழங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story