பார்வதிபுரம் மேம்பாலத்தில் விபத்து: மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி


பார்வதிபுரம் மேம்பாலத்தில் விபத்து: மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2019 4:45 AM IST (Updated: 25 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் புதுக்குடியிருப்பு வேதநாயகம் தெருவை சேர்ந்தவர் சுஜித் (வயது 23), எலக்ட்ரீசியன். இவரும், அதே பகுதியை சேர்ந்த விபின்ராஜ் (16) மற்றும் வாத்தியார்விளையை சேர்ந்த ராம்குமார் ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இதில் விபின்ராஜ், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நண்பர்கள் 3 பேரும் நேற்று பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றினர். பின்னர் இரவு 8.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பால்பண்ணை பகுதியில் இருந்து பார்வதிபுரம் மேம்பாலத்தில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விபின்ராஜ் ஓட்டினார். மேம்பாலத்தில் வெட்டூர்ணிமடம் செல்லும் திருப்பத்தில் திரும்பி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. அதோடு நிற்காமல் மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீதும் மோட்டார் சைக்கிள் மோதி நொறுங்கியது.

இந்த விபத்தில் நண்பர்கள் 3 பேரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுஜித்தும், விபின்ராஜூம் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ராம்குமார் மட்டும் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார், பிணமாக கிடந்த சுஜித் மற்றும் விபின்ராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலம் மட்டுமல்லாமல் வடசேரி பஸ் நிலையம் வரை 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்து வாகனங்களை ஒழுங்குபடுத்தினார்கள். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story